சுகம் உங்களுடையது
மனிதனுக்கு ஆஸ்தி கல்வி அந்தஸ்து போன்ற எல்லாம் இருந்தாலும் அவன் தன் வாழ்க்கையில் இளைப்பாறுதல் சந்தோஷம் சமாதானம் சுகம் ஆகியவை அற்றவனாகக் காணப்படுகிறான். சந்தோஷத்தையும் சமாதானத்தையும் அடைவதற்காக அவன் பல முயற்சிகளை மேற்கொள்ளுகிறான்; பணம் செலவழித்துப் பல பாவ இன்பங்களில் ஈடுபடுகிறான் எனினும் இவையெல்லாம் அவனுடைய ஆத்துமாவில் அமைதியின்மையையும் சரீரத்தில் வியாதியையும் மரணத்தையும் மட்டுமே கொண்டுவருகின்றன.
தேவன் மனிதனைச் சிருஷ்டித்தபோது அவனைத் தம்முடைய சொந்த சாயலின்படியும் ரூபத்தின்படியும் சிருஷ்டித்ததுடன். சந்தோஷம் சமாதானம் இளைப்பாறுதல் உள்ளவனாக ஆரோக்கியமான சரீரத்துடன் நித்திய ஜீவனையுடையவனாகச் சிருஷ்டித்தார். ஆனால் மனிதன் தேவனுடைய கட்டளையை மீறிப் பாவஞ்செய்த போது அவன் தன்னுடைய ஆசீர்வாதங்களை இழந்தது மட்டுமல்லாமல். பயம் நிராசை மற்றும் சரீரத்தில் பெலவீனம் குணமாக்கப்பட முடியாத வியாதிகள் மரணம் இவற்றுக்கு அடிமையானான்.
மருத்துவ ரீதியான சுகம் பிசாசின் ஆவிகளின் மூலம் சுகம் போன்ற பல முறைகள் கையாளப்பட்டாலும் ஒன்றும் மனிதனுக்குப் பூரண சுகத்தை அளிப்பதாகத் தெரியவில்லை. மேலும் சில மருந்துகளுக்குச் சில பக்க விளைவுகள் உள்ளன. இவை மற்றொரு வியாதிக்கு வழிவகுக்கவுங் கூடும். நவீன விஞ்ஞானம் அநேக புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தியிருந்தாலும் புதிய வியாதிகள் தோன்றி மருத்துவர்களுக்குங்கூட பெரும் சவால் விட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலைகளின் மத்தியில். இந்த இருபதாம் நூற்றாண்டில் ‘என் வியாதியிலிருந்து என்னைச் சுகமாக்க ஒரு மருத்துவருமே இல்லையோ” என்று சிந்தித்து நீங்கள் ஒருவேளை கலக்கமடைந்திருக்கலாம்.
நண்பர்களே! நாங்கள் உங்களுக்கு ஒரு மருத்துவரை அறிமுகப்படுத்துகிறோம். நீங்கள் அவரிடம் விசுவாசத்தோடு வந்தால் போதும் அவரே மனுக்குலத்திற்குச் சிறந்த வைத்தியர். ‘இயேசு” என்னும் நாமமுள்ள அவர். ‘நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” (யாத். 15:26) என்று சொல்லுகிறார். மேலும் பரிசுத்த வேதாகமம் ‘அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்”. ‘அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நம்முடைய நோய்களைச் சுமந்தார்” (ஏசாயா 53:5; மத். 8:17) என்று கூறுகிறது. ‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28) என்று அவர் நம்மை அழைக்கிறார். கர்த்தராகிய இயேசு பாவத்தையும் வியாதியையும் சாபத்தையும் மரணத்தையுங்கூட ஜெயித்து உயிர்த்தெழுந்து என்றென்றைக்கும் ஜீவிக்கிறார். அவர் தாம் பெற்ற அதே ஜெயத்தை தம்மை விசுவாசிப்பவர்களுக்கு வாக்குப்பண்ணுகிறார்!
நீங்கள் கர்த்தராகிய இயேசுவிடம் உங்கள் பாவங்களை மனஸ்தாபத்துடன் அறிக்கை செய்து அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால். அவர் உங்கள் பாவங்களை மன்னித்து உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கொடுப்பதுமன்றி உங்கள் சரீரத்திலுள்ள வியாதியை அகற்றி பூரண சுகத்தை அளிப்பார். ‘அவர்தாமே (கர்த்தராகிய இயேசு) தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” (1 பேதுரு 2:24) என்று வேதவசனம் சொல்கிறது.
கர்த்தராகிய இயேசு இப்பூமியில் ஜீவித்த நாட்களில் வியாதியஸ்தரைக் கண்டு மனதுருகினார். அவர் பத்து குஷ்டரோகிகளைச் சுகமாக்கினார். கர்த்தராகிய இயேசுவிடம் வந்த வியாதியஸ்தர் அனைவரும் சுகம் பெற்றுத் திரும்பினர். அவர் குருடர் பார்வையடையவும் செவிடர் கேட்கவும் ஊமையர் பேசவும் முடவர் நடக்கவும் செய்தார். அவர் மரித்தோரையுங்கூட உயிரோடு எழுப்பினார். கர்த்தராகிய இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். இன்றுங்கூட குணமாக்கக் கூடாதபடி அவருடைய கரம் குறுகிப் போகவில்லை.
மருத்துவ விஞ்ஞானமும் அறுவை சிகிச்சை முறையும் ஒரு மனிதனுடைய சரீரத்தைச் சுகமாக்கக் கூடும். ஆனால் பரம வைத்தியராகிய கர்த்தராகிய இயேசுவினால் இலவசமாகக் கொடுக்கப்படுகிற தெய்வீக சுகமானது சரீரத்தை மட்டுமல்லாது மனது ஆத்துமா போன்ற மனிதனின் எல்லா அம்சங்களையும் சுகமாக்க வல்லதாயிருக்கிறது.
ஆகையால் நீங்கள் இப்போது சுகமாக்கப்பட வேண்டுமாயின் உங்களுடைய வியாதி எதுவாயிருந்தாலும் பரவாயில்லை. மருத்துவர்கள் உங்களைக் கைவிட்டிருந்தாலுங்கூட கர்த்தரும் பரம வைத்தியருமான இயேசுவின் கரங்களில் உங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்து பின்வரும் ஜெபத்தைச் சொல்லுங்கள்:
‘கர்த்தராகிய இயேசுவே கல்வாரிச் சிலுவையில் என் பாவங்களுக்காக மட்டுமல்லாமல் என் வியாதிகளுக்காகவும் நீர் மரித்தீர் என்று நான் விசுவாசிக்கிறேன். கிருபையாக என்னுடைய பாவங்களை எல்லாம் மன்னித்து என்னை என் வியாதியிலிருந்து விடுதலையாக்கி எனக்குப் பூரண சுகத்தைத் தாரும். உம்முடைய பிள்ளையாக ஒரு தூய்மையான ஜீவியம் செய்ய நான் ஆசிக்கிறேன். ஆமென்”.
You can find equivalent English tract @