512

 

பரிசுத்த ஆவி

பெந்தெகொஸ்தே நாளன்று மேல் வீட்டறையில் காத்திருந்த நூற்றிருபது பேர் மேல் பரிசுத்த ஆவி பொழிந்தருளப்பட்டது போலவே. இக்கடைசி நாட்களிலும் தேவன் தம் பரிசுத்த ஆவியை மாம்சமான யாவர்மேலும் ஊற்றிக்கொண்டிருக்கிறார்.

1. ஒருவன் கிறிஸ்துவை விசுவாசிக்கும்போதே பரிசுத்த ஆவியையும் பெற்றுக்கொள்கிறானா?
அல்ல. எபேசுவிலிருந்த விசுவாசிகள் தாங்கள் விசுவாசிகளான போது பரிசுத்த ஆவி உண்டென்பதைக் கேள்விபட்டிருக்கவுங்கூட இல்லை என்பதை அறிந்த அப்.பவுல் அவர்களுக்கு உபதேசித்து அந்நிய பாஷையின் அடையாளத்தோடு பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் அனுபவத்திற்கு அவர்களை வழிநடத்தினார் (அப். அதி. 19). இதினிமித்தமே அவர்களுக்குத் தான் எழுதிய நிருபத்தில் அவர் ‘நீங்களும் விசுவாசிகளான பின்பு … பரிசுத்த ஆவியால் … முத்திரை போடப்பட்டீர்கள்” என்று கூறுகிறார் (எபே. 1:13).

2. ஒருவன் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தாலுங்கூட தண்ணீர் ஞானஸ்நானம் பெற வேண்டுமா?
ஆம். கொர்நேலியுவின் வீட்டில் அப்.பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்ட பின்னரே ஞானஸ்நானம் பெற்றனர் (அப். 10:47 48). அவர்கள் தேவனால் தங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படிக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள் (வச.33). அவர்களுடைய இருதயத்தை அறிந்த தேவன் அவர்களைப் பரிசுத்த ஆவியினால் நிரப்பினார். பின்பு அவர்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர்.

3. இந்நாட்களில் நாம் காத்திருந்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வது அவசியமா?
ஆம். கர்த்தராகிய இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து எருசலேமில் காத்திருந்து (அப். 1:5 14). சீஷர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர். இக்கட்டளை கிறிஸ்துவின் இரகசிய வருகை வரையுள்ள எல்லா நாட்களுக்கும் பொருந்தும். ‘பரம பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம்” என்று கர்த்தர்தாமே கூறியிருக்கிறார் (லூக்கா 11:9-13).

4. பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரே வெளிப்படையான அடையாளம் அந்நிய பாஷைகளில் பேசுவது தானா?
ஆம். மாற்கு 16:17 18-இல் உள்ள விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களில் அந்நிய பாஷைகளில் பேசுவதைத் தவிர மற்ற அனைத்தும் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு முன்பே சீஷர்களில் காணப்பட்டன. பெந்தெகொஸ்தே தினத்தன்றுதான் இந்த அடையாளம் அவர்களில் காணப்பட்டது. அதன்பின் பரிசுத்த ஆவி பொழிந்தருளப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் அந்நிய பாஷைகளில் பேசுவது மட்டுமே பொதுவாகக் காணப்பட்ட அடையாளமாயிருந்தது (அப். 2:4; 10:45 46; 19:6).

5. நாம் ஏன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்?
இது கர்த்தராகிய இயேசுவின் ஒரு கட்டளை (அப். 1:4 5)
நாம் தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பதற்கு (யோவான் 3:5)
நாம் கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாயிருப்பதற்கான பெலனைப் பெற்றுக்கொள்ள (கிறிஸ்துவை நம் மூலம் வெளிப்படுத்தும்படி) (அப். 1:8)

நாம் கிறிஸ்துவின் சரீரத்தின் (சபை) அவயவமாகும்படி (1 கொரி. 12:13)
நாம் ஜெபத்தில் போராடும்படி (ரோமர் 8:26)
நாம் பக்திவிருத்தி அடையத்தக்கதாக (1 கொரி. 14:12)
நாம் தேற்றப்படும்படி – அவர் நம் தேற்றரவாளன் (யோவான் 16:7)
நம் சாவுக்கேதுவான சரீரங்கள் உயிர்ப்பிக்கப்படும்படி (ரோமர் 8:11)
நாம் பரிசுத்தமாக்கப்படும்படி (ரோமர் 15:15)
நாம் மீட்கப்படும் நாளுக்கென முத்திரையிடப்படும்படி (எபே. 4:30)

6. நாம் கர்த்தருடைய இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவதற்குப் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமா?
ஆம். நம்மைப் பரிசுத்தப்படுத்தி கர்த்தருடைய வருகைக்கு தகுதிப்படுத்துபவர் பரிசுத்த ஆவியானவரே (ரோமர் 15:15; 2தெச. 2:13).

7. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்ற தேவபிள்ளைகள் யாவரும் கர்த்தருடைய இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்களா?
அல்ல. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருப்பவர்கள் அப்போஸ்தல உபதேசங்களின் மேல் கட்டப்பட்டு ‘கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்கு” வளர வேண்டும் (எபே. 4:11-13; 5:23-27). கறை திரை பிழை முதலானவை இல்லாத பரிசுத்தமும் மகிமையுமுள்ள சபை மட்டுமே கிறிஸ்து வரும்போது எடுத்துக்கொள்ளப்படும். கைவிடப்படுவோர் அந்திக் கிறிஸ்துவினால் உபத்திரவத்திற்குள்ளாக்கப்படுவர் (வெளி. 13:17).

நண்பரே! இக்கிருபையின் காலத்தில் விசுவாசத்துடன் கர்த்தரிடத்தில் பரிசுத்த ஆவியைக் கேளுங்கள் அது அவருடைய வாக்குத்தத்தமாகையால் அவர் அதை நிச்சயமாகவே உங்களுக்குத் தருவார்.
ஜெபம்:

‘அன்புள்ள ஆண்டவரே பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பி உம் ராஜ்யத்துக்கு என்னைத் தகுதிபடுத்தும். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்ளுகிறேன். ஆமென்”.