Eternal_inhertance-tamil123

நித்திய சுதந்தரம்

ஆதியிலே தேவன் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார் அப்போது மனுஷன் ஜீவாத்துமாவானான் என்று மனுஷனுடைய சிருஷ்டிப்பைக் குறித்து வேதாகமம் கூறுகிறது (ஆதி. 2:7). இவ்விதம் தேவனுடைய அழிவில்லாத ஜீவனை உடைய அழியாத ஆத்துமா உள்ளவனாகச் சிருஷ்டிக்கப்பட்டிருந்த மனிதன் பாவஞ்செய்தபோது அவனுடைய ஆத்துமா தேவனைவிட்டுப் பிரிக்கப்பட்டதுடன் அவனுடைய சரீரமும் அழிவுக்குரியதாயிற்று. இவ்வாறு நம்முடைய சரீரம் அழிவுக்குரியதாயிருந்தாலும் நம் ஆத்துமா அழிவில்லாததாய் இருப்பதால் இப்பூமியில் நாம் ஜீவிக்கும் நம் சொற்பகால வாழ்க்கைக்குப்பின் நாம் கோடாகோடி வருஷங்களாக முடிவில்லாத நித்தியத்தில் இருக்கப்போவது நிச்சயம். நண்பனே நீர் இதைச் சிந்தித்ததுண்டா? இந்த உண்மையை நீர் ஒருவேளை பரிகசித்து அற்பமாக எண்ணலாம். அது எவ்வாறாயினும் என்றாகிலும் ஒருநாள் நீர் மரிக்கப்போவது நிச்சயம். ‘ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” (எபி. 9:27). அதன் பின்னர் நீதிமான்கள் நித்திய ஜீவனை அடையவும் துன்மார்க்கரோ நித்திய ஆக்கினையை அடையவும் போவார்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது (மத். 25:46). எனவே நம்முடைய வாழ்க்கை மரணத்தோடு முடிவடைந்துவிடும் என்று எண்ணுவது வீண் நினைவேயாகும். மரணத்துக்குப் பின் நீர் நித்தியமாய் நரகத்தில் அல்லது மோட்சத்தில் இருக்கப்போவது நிச்சயம் என்பதை நீர் அறிந்துகொள்ள வேண்டும். ‘துன்மார்க்கரும் தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும் நரகத்திலே தள்ளப்படுவார்கள்” (சங். 9:17). அதுமட்டுமல்ல சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் ஒன்றுபோல் நியாயந்தீர்ப்பார் (பிர. 3:17). ஏனெனில் சன்மார்க்கக் கிரியைகளாகிய தான தர்மம் பூசை பலிகள் இவற்றால் நாம் கடவுளுக்கு முன் நம்மைக் குற்றமற்றவர்களாக்கிக் கொள்ள முடியாது. தேவன் ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின் பலியிலும் எண்ணெயாய் ஓடுகிற நெய்வேத்தியங்களிலும் பிரியப்படமாட்டார். ஆனால் ‘ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே” (லேவி. 17:11). பாவியான மனிதன் தன் பாவ நிவிர்த்திக்காகத் தன் இரத்தத்தைச் சிந்தித் தன்னை மீட்டுக்கொள்ளக் கூடுமோ? அதனாலேயே குற்றமற்றவர் குற்றவாளிகளுக்காகவும் பாவமறியாதவர் பாவிகளுக்காகவும் மரிக்க வேண்டியது அவசியம் என்கிற நியாயம் நிரூபிக்கப்படுகிறது.
உலகத்திலுள்ள முழு மனித வர்க்கமும் பாவ உளையில் சிக்கிக்கொண்டு அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழியைத் தேடிக்கொண்டிருக்கிறது. மனிதன் கடவுளைத் தேடும்போது அவரும் அவனை நாடி வருகிறார். அன்பே உருவாகிற தேவன் தம்மைத் தாழ்த்தி மனிதனாய் பாவமற்றவராய் அவதரித்தார். எங்கும் நிறைந்தவர் மனித உருவில் சஞ்சரித்தார். அவரே குற்றமற்றவரும் பரிசுத்தரும் பாவிகளுக்கு விலகினவருமாகிய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. அவர் உலகத்தாருடைய பாவங்களைத் தம்மேல் சுமந்தவராகப் பாடுபட்டு மரித்தார். எனினும் அவர் பாவமற்றவராயிருந்தபடியால் மரித்த மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தார். அவருடைய மரணத்தின் மூலமாய் அவரை விசுவாசிக்கிறவர்களுக்குப் பாவ மன்னிப்பு பரிசுத்த ஜீவியமும் சம்பாதித்து வைக்கப்பட்டிருக்கிறது.
‘அவராலேயன்றி (கர்த்தராகிய இயேசுகிறிஸ்து) வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை: நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப். 4:12). ‘அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவ மன்னிப்பைப் பெறுவான்” (அப். 10:43). உலக இரட்சகராகிய இயேசுகிறிஸ்து உம் பாவங்களுக்காக மரித்தார் என்பதை விசுவாசித்து உம் பாவங்களை மனஸ்தாபத்துடன் அறிக்கை செய்யும்போது அவர் பாவ மன்னிப்பைத் தருவதுடன் இவ்வுலகில் பரிசுத்தமாய் ஜீவிக்கக் கூடிய சக்தியையும் தருகிறார். எனவே உமக்காக ஜீவன் தந்த ஆண்டவராகிய இயேசுவை விசுவாசித்து உம் பாவங்களை மனஸ்தாபத்துடன் அவரிடம் அறிக்கை செய்வீராக. அவர் உம் பாவங்களை மன்னித்து உம் இருதயத்தைச் சமாதான சந்தோஷத்தால் நிறைத்து வியாதிகளிலிருந்தும் பூரண சுகத்தை அருளி உம்மைப் பரிசுத்த ஜீவியத்திற்கு நேராக நடத்துவார். பரிசுத்த ஜீவியம் செய்கிற அவருடைய அடியார்களுக்கு நித்திய சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
சிநேகிதனே! இப்போது நீர் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை உம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாவிடில் அவரை உம்முடைய நியாயாதிபதியாகச் சந்திக்க வேண்டியது வருமே! ‘பின்பு நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்;… மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்;… யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத் தீர்ப்படைந்தார்கள்” (வெளி. 20:11-13). ஆதலால் இன்று நீர் மரித்தால் உம்முடைய நித்தியத்தை எங்கே செலவழிப்பீர்? நீர் மோட்ச ராஜ்யத்தில் சுதந்தரம் பெற்றுக்கொள்ள விரும்பினால் உம் ஜீவியத்தைக் கர்த்தராகிய இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்து பின்வரும் ஜெபத்தைச் சொல்வீராக.
‘கர்த்தராகிய இயேசுவே என் பாவங்களுக்காக நான் அடைய வேண்டிய தண்டனையை நீர் உம்மேல் ஏற்றுக்கொண்டு எனக்காக மரித்தீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். நான் செய்த எல்லாப் பாவங்களையும் எனக்கு மன்னியும். என்னை நித்திய மோட்ச ராஜ்யத்திற்குத் தகுதிபடுத்தும். ஆமென்”.

 

You can find equivalent English tract @

Where will you spend your eternity ?