you-are-special-tamil123

நீர் விசேஷமான ஒருவர்

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் நவீன சாதனங்களும் மனித வேலைத் திறனுக்குப் பதிலாக இயங்கிவரும் இந்தக் கணிப்பொறி யுகத்தில்  மனிதனுடைய உண்மையான விலைமதிப்பு அறியப்படாததாயிருக்கிறது. ஒருசிலர் தங்கள் திறமைகள்  தாலந்துகள் போன்றவற்றால் பிரபலமானவர்களாவது உண்மையே. அவர்கள் பொதுஜனங்களின் கவனத்தைக் கவருவதில் வெற்றி காணலாம். ஆனால் பெரும்பான்மையானோரும் மற்றவர்களின் கவனத்தில் படாதவர்களாக  அடையாளங்கண்டு கொள்ளப்படாதவர்களாகக் கடந்துபோகின்றனர்.

ஒரு மனித சரீரத்தின் விலை மதிப்பு  அதில் உள்ளடங்கிய இரசாயனப் பொருட்களின் மதிப்பின்படி 36 ரூபாய் மாத்திரமே என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலகம் போகிற போக்கில் மனிதன் ஒன்றுமே இல்லை. வாலிபரும்  ஏன் முதியவர்களுங்கூட  தாங்கள் எவ்வளவுதான் விடாமுயற்சியுடன் பிரயாசப்பட்டாலும்  இவ்வுலகில் தாங்கள் ஒரு பொருட்டல்ல என்பதுபோல் எண்ணி  ஏமாற்றமடைந்து வருந்துகின்றனர்.

வேதாகமத்தில் கர்த்தராகிய இயேசு காணாமற்போன ஆட்டைப் பற்றிய ஒரு உவமையைக் கூறினார் (லூக். அதி. 15). ஒரு மேய்ப்பனுக்கு நூறு ஆடுகள் இருந்தன. அவற்றில் ஒன்று காணாமற்போனது. அவன் மற்ற தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு அந்த ஒரு ஆட்டைத் தேடிப் போனான். வழியில் அவனுக்குப் பல ஆபத்துகள் இருந்தன. எனினும் அவன் அந்த ஒரு ஆட்டைத் தேடிக் கண்டுபிடித்தான். அதை அவன் தன் தோளின் மேல் போட்டுக்கொண்டு  வீடு வந்து  தன் அயலகத்தாரை அழைத்து  ‘காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன்  என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள்” என்று சொன்னான் (வச. 6). ஒரே ஒரு ஆடு ஆயினும் அந்த மேய்ப்பனுக்கு அது மிக முக்கியமானதாயிருந்தது. கர்த்தராகிய இயேசு  ‘நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்”  ‘நானே அவைகளை அறிந்திருக்கிறேன்” (யோவான் 10:11 27) என்று கூறினார்.

நீர் ஒருவேளை மந்தையை விட்டும் உம் சொந்த வீட்டை விட்டும் தூரத்தில் அலைந்து திரியும் காணாமற்போன ஒரு ஆட்டைப் போலிக்கக் கூடும். ஆனால் நல்ல மேய்ப்பனுக்கு நீர் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு தனிப்பட்ட நபர். அவரைப் பொறுத்த வரை நீர் முழு உலகத்தைக் காட்டிலும்  அவருடைய சொந்த ஜீவனைப் பார்க்கிலும் மிக அதிக விலையேறப் பெற்றவர். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தார் என்று வேதாகமம் கூறுகிறது (ரோமர் 5:8). ‘ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல்  தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும்  நான் உன்னை மறப்பதில்லை” (ஏசாயா 49:15) என்று தேவன் கூறுகிறார்.

நீர் ஒருவேளை உம்மை யாரும் பொருட்படுத்துவதில்லை  உம்மை புரிந்து கொள்வதில்லை என்ற எண்ணங்கொண்டிருக்கலாம். ஆனால் உமக்காகக் கவலைப்படும் ஒருவர்  உம்மைப் புரிந்துகொள்ளும் ஒருவர் உண்டு. அவரே கர்த்தராகிய இயேசுகிறிஸ்து. அவர்  தாம் இரட்சிப்பதற்குத் தகுதியான ஒருவராக தம் ஜீவனையே உமக்காகக் கொடுப்பதற்குத் தகுதியான ஒருவராக  தம்முடைய பார்வையில் மிக விலையேறப்பெற்ற ஒருவராய்  உம்மைக் காண்கிறார். அவரைப் பொறுத்தவரை  முழு உலகத்தைக் காட்டிலும் நீர் அவருக்கு விலையேறப்பெற்றவர். கர்த்தராகிய இயேசு உம்மை நேசிக்கிறார். அவர் உம்மை இரட்சிப்பதற்காக மரித்தார். உம்மை மன்னிக்கும்படியாக  நீர் தேடிக்கொண்டிருக்கிற அந்தச் சமாதானத்தை  சந்தோஷத்தை  திருப்தியை உமக்கு அளிக்கும்படியாக  அவர் உயிர்த்தெழுந்து இன்றும் உமக்காக ஜீவிக்கிறார். நீர் அவரை உம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால் அவருடைய பிள்ளையாக மாறலாம்.

நீர் ஒருவேளை  ‘எனக்கு இனி நம்பிக்கைக்கு வழியே இல்லை  தீய பழக்கங்களுக்கு நான் அடிமையாயிருக்கிறேன். அவற்றினின்று நான் விடுதலைபெறும்படி எனக்கு உதவி செய்யக் கூடிய ஒருவருமில்லை” எனக் கூறலாம். இயேசுகிறிஸ்துவின் மூலமாகப் புதிய நம்பிக்கையையும்  புதிய ஜீவனையும்  சந்தோஷத்தையும்  சமாதானத்தையும்  சரீர சுகத்தையும்  ஒரு நோக்கத்தையும்  இலக்கையும் நீர் கண்டடையலாம். நீர் உம் ஜீவியத்தை இயேசுகிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தால் இவற்றை நீர் இன்றே  இப்போதே கிடைக்கப் பெறுவீர்! நீர் கர்த்தராகிய இயேசுவுக்கு மிகவும் விசேஷமான ஒருவராயிருப்பீர்.

ஆண்டவராகிய இயேசுவை விசுவாசித்துப் பின்வரும் ஜெபத்தைச் சொல்வீராக:

     ‘கர்த்தராகிய இயேசுவே நான் ஒரு பாவியாயிருக்கிறேன்.  என் பாவங்களைத் தயவாய் எனக்கு மன்னியும். நீர் என்னை நேசித்தபடியினால் எனக்காக மரித்தீர் என்று நான் விசுவாசிக்கிறேன். இனி என் ஜீவிய கால முழுவதும் நான் உம்மைப் பின்பற்றுவேன். உம்மை என் இரட்சகராகவும் தேவனாகவும் நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். நான் என் வாழ்க்கை முழுவதையும் உமக்கு ஒப்புவிக்கிறேன். ஆமென்”.

 

You can find equivalent English tract @

You are somone special