உமது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா?
நீர் இந்தப் பூமியில் பிறந்தபோது உம் பெற்றோர் பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் உமது பிறப்பைப் பதிவு செய்துள்ளார்கள் அத்துடன்
நீர் பள்ளியில் சேர்க்கப்பட்டபோது
நீர் வேலையில் சேர்ந்தபோது
நீர் நிலம் வீடு வாங்கும்போது
நீர் வாகனங்களுக்கு உரிமம் செய்யும்போது
நீர் வங்கிகளில் கணக்கு துவக்கும்போது
நீர் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) வாங்கும்போது
நீர் வாக்காளர் அடையாள அட்டை பெறும்போது
உமது வீட்டிற்கு மின் இணைப்பு பெறும்போது
இவ்வாறாக இவ்வுலகில் ஆங்காங்கே உமது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அழிந்துபோகிற இவ்வுலகில் வாழ்க்கை நடத்த இவ்வளவு இடங்களிலும் உமது பெயர் பதிவு செய்யப்பட வேண்டுமானால் நீர் உமது மரணத்திற்குப் பின் என்றென்றுமாய் அழிவில்லாத நித்திய காலம் சொர்க்கம் அல்லது மோட்சத்தில் சமாதான சந்தோஷமாய் வாழ உமது பெயர் இப்போதே அங்கு பதிவு செய்யப்பட வேண்டாமா? ஆம். உமது பெயர் இப்போதே அங்கு பதிவு செய்யப்படத்தான் வேண்டும்.
அங்கு உம் பெயர் பதிவு செய்யப்பட நீர் செய்ய வேண்டியது என்ன? அதற்காகப் பரலோகத்திலுள்ள தேவனுடைய குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக நீர் பிறக்க வேண்டும். அதைக் குறித்தே பரிசுத்த வேதாகமத்தில் ‘அவருடைய (கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்) நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்” (யோவான் 1:12) என நாம் வாசிக்கிறோம். கர்த்தராகிய இயேசுவை முழு இருதயத்தோடும் நீர் விசுவாசித்து அவரை உம் சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டால் நீர் அவருடைய பிள்ளையாக மாற்றப்படுவீர். அவரே உம் பாவங்களுக்காக நீர் அடைய வேண்டிய தண்டனையைக் கல்வாரிச் சிலுவையில் ஏற்றுக்கொண்டு உமக்காக மரித்தார். அவர் மரித்தது மட்டுமல்லாமல் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து என்றென்றுமாய் ஜீவிக்கிறார். உம் சிறுபிராயம் முதல் இது வரை செய்த பாவங்களை நீர் மனஸ்தாபத்துடன் ஒவ்வொன்றாக அவரிடம் அறிக்கை செய்தால் அவர் உம் பாவங்களை மன்னித்து உம்மைத் தம் பிள்ளையாக ஏற்றுக்கொள்வார். உம் இருதயத்தைத் தம் சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் அவர் நிறைப்பார். இவ்விதம் தம்முடைய பிள்ளைகளாக மாற்றப்பட்டவர்களிடம் இவ்வுலகில் இருந்தபோது ‘உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்” என்று அவர் கூறினார் (லூக்கா 10:20). கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்து பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்கிறவர்களின் பெயர்கள் பரலோகத்தில் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் ‘தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான்” (1 யோவான் 3:9) என்று வேதாகமம் கூறுவது போல இப்படிப்பட்டவர்கள் இனிப் பாவஞ்செய்யாமல் இப்பாவ உலகில் தூய்மையாய் வாழ கர்த்தராகிய இயேசு அவர்களுக்கு அருள் செய்கிறார். மேலும் கர்த்தராகிய இயேசு கல்வாரிச் சிலுவையில் உமக்காக மரித்தபோது உம் பாவங்களை மட்டுமல்லாமல் உம் வியாதிகளையும் சுமந்தார். எனவே அவரை விசுவாசிப்பவர்கள் தீராத வியாதிகளிலிருந்தும் சுகம் பெற்று ஆரோக்கியத்துடன் வாழலாம்.
இவ்வாறிருக்க பரலோகத்தில் தங்கள் பெயர்கள் பதிவு செய்யப்படாதவர்களின் முடிவு என்ன? மரணத்திற்குப் பின் உண்டாகும் நியாயத்தீர்ப்பின் நாளிலே அவர்களுக்குச் சம்பவிப்பதைப் பற்றி ‘ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே (நரக அக்கினியில்) தள்ளப்பட்டான்” (வெளி. 20:15) என்று கூறப்பட்டுள்ளது.
கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் உம் பாவங்களை நீக்கி மன்னிப்பையும் அவருடைய சிலுவை உம் சாபத்தை நீக்கி ஆசீர்வாதத்தையும் அவரது தழும்புகள் உம் வியாதிகளை நீக்கி சுகத்தையும் அவருடைய மரணம் உம் மரண பயத்தை நீக்கி தைரியத்தையும் அளிக்கிறது. கர்த்தராகிய இயேசுவின் ஜீவனாலே நித்திய ஜீவனையும் நீர் பெற்றுக்கொள்வீர். உமது பெயர் பூமியில் அல்ல பரலோகத்திலுள்ள ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படும். இம்மையில் உலகம் கொடுக்கக்கூடாத மெய்யான சமாதானத்தையும் சந்தோஷத்தையும் மரணத்திற்குப் பின் பரலோகத்தில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தையும் பெற்றுக்கொள்ள இன்றே ஆண்டவராகிய இயேசுவிடம் வாரீர்! கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்துப் பின்வரும் ஜெபத்தைச் சொல்வீராக:
‘ஆண்டவராகிய இயேசுவே நான் உம்மை விசுவாசித்து என் ஜீவியத்தை முழுவதுமாக உமக்கு அர்ப்பணிக்கிறேன். என் பாவங்கள் நீங்க என்னை உம் தூய இரத்தத்தினால் கழுவி சுத்திகரித்து உம் பிள்ளையாக ஏற்றுக்கொண்டு பரலோகத்தில் இப்போதே என் பெயரைப் பதிவு செய்தருளும். இனி என் வாழ்நாளெல்லாம் உம் பிள்ளையாகவே நான் ஜீவிப்பேன். ஆமென்”.
You can find equivalent English tract @