One gave his life123

உமக்காக ஜீவன் தந்தவர்

தேவன் மனிதனைத் தம்முடைய சாயலின்படி சிருஷ்டித்தார். அவன் தேவனோடு ஐக்கியமுள்ளவனாய் தனக்குள் சமாதான சந்தோஷமுள்ளவனாகவும் சரீரத்தில் நல்ல ஆரோக்கியமுள்ளவனாகவும் இருந்தான். ஆனால் அவன் பாவஞ்செய்தபோது தேவனோடு தனக்கிருந்த ஐக்கியத்தை இழந்து சமாதான சந்தோஷமற்றவனாய் பலவித வேதனைகளுக்கும் சரீரத்தில் பலவித வியாதிகளுக்கும் ஆளாகி. தன் ஆவி ஆத்துமா சரீரத்தில் நிம்மதியற்றவனானான். இப்படிப்பட்ட மனுஷனை மீட்டுக்கொண்டு. அவன் இழந்துபோன யாவற்றையும் அவனுக்கு மீண்டும் கொடுக்கும்படியாக ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது சிருஷ்டி கர்த்தராகிய தேவன் இயேசு என்னும் நாமத்தில் மாம்சமும் இரத்தமுமுடையவராக இந்த உலகத்தில் பாவமில்லாதவராய் அவதரித்தார். அவர் இந்தப் பாவம் நிறைந்த உலகில் பாவமில்லாமல் ஜீவித்து ஜனங்களுக்கு நன்மை செய்யும்படியாக கிராமங்கள்தோறும் பட்டணங்கள்தோறும் சுற்றி நடந்து குருடருக்குப் பார்வையளித்து செவிடரைக் கேட்கச் செய்து ஊமையரைப் பேச வைத்து குஷ்டரோகிகளைச் சுகமாக்கி பிசாசினால் பீடிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கி தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்.
இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது; ஆத்துமாவுக்காகப் பாவ நிவிர்த்தி செய்வது இரத்தமே என்னும் பிரமாணத்திற்கிணங்க முழு மனுக்குலத்திற்காகவும் தம் இரத்தம் முழுவதையும் சிந்த நமது கர்த்தராகிய இயேசு தீர்மானித்து சிலுவை மரணத்திற்கு தம்மை ஒப்புக்கொடுத்தார். ரோமப் போர்ச்சேவகர்கள் அனுஅனுவாய் அவரைச் சித்திரவதை செய்தனர்; முள்ளினால் செய்த ஒரு முடியை அவர் தலையின் மீது வைத்து அவரைக் கோலினால் அடித்தனர்; வாரினால் அடித்தனர். பின்பு அவரைச் சிலுவையில் அறைந்தனர். கர்த்தராகிய இயேசு மூன்று ஆணிகளில் சிலுவை மரத்தில் தொங்கினார்.
பாவமறியாத பாவமில்லாத பாவஞ்செய்யாத ஆண்டவராகிய இயேசு நம்முடைய மீறுதல்களுக்காகக் காயப்பட்டார். அவர் நம்முடைய அக்கிரமங்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. பாவத்தின் சம்பளம் மரணமாகும். மனிதவர்க்கம் தன் பாவத்தினிமித்தம் அடைய வேண்டிய மரணமாகிய தண்டனையைக் கர்த்தராகிய இயேசு தம்மேல் ஏற்றுக்கொண்டு இவ்விதம் சிலுவை மரத்தில் மரித்தார்.
‘நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஷ்து நமக்காக மரித்ததினாலே. தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8). கர்த்தராகிய இயேசு இவ்விதம் மரித்தது மட்டுமல்ல. அவர் தாம் சொன்னபடியே மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்தவராக மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். உயிர்த்தெழுந்த அவர் எல்லா வானங்களுக்கும் மேலாக ஏறிச் சென்று நமக்காக இப்போதும் ஜீவிக்கிறார்.
அருமையான நண்பனே! கர்த்தராகிய இயேசு உமக்காகப் பட்ட பாடுகளையும் உமக்காக அடைந்த வேதனைகளையும் நீர் தியானிக்கையில் உம் உள்ளம் உருகிடும்: உம் கல் மனம் கரைந்திடும். அந்த வேளையில் உமது பாவங்களுக்காகவும் அக்கிரமங்களுக்காகவும் கண்ணீரோடு ஆண்டவராகிய இயேசுவிடம் மன்னிப்பு கேட்பீரேயானால் அவர் உம்முடைய பாவங்களை மன்னித்து உமக்குச் சமாதான சந்தோஷ இளைப்பாறுதலைத் தருவார்.
‘இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்…நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து …நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:7-9).
இயேசுகிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மட்டுமல்ல நமது வியாதிகளுக்காகவும் சிலுவையில் மரித்தார். ‘அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நம்முடைய நோய்களைச் சுமந்தார்” (மத். 8:17). ‘அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5). மனிதனுடைய பாவத்தால் சாபமும் சாபத்தால் வியாதியும் அவன்மேல் வந்தது. கர்த்தராகிய இயேசு நமது வியாதிகளைச் சிலுவையில் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் என்று விசுவாசித்தால் நாம் வியாதியிலிருந்து பூரண விடுதலை பெற்று ஜீவிக்கலாம்.
அருமையான நண்பனே! உமக்காக ஜீவன் தந்த ஆண்டவராகிய இயேசு உயிர்த்தெழுந்தவராய் இன்றும் உமக்காக ஜீவிக்கிறபடியினால் அவரை நீர் விசுவாசிப்பீரேயாயின் கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் பாவங்களிலிருந்தும் வியாதிகளிலிருந்தும் நீர் விடுதலை பெற்றுக் கொள்ளலாம். அன்றியும் பரிசுத்தமான ஜீவியம் செய்து பரலோகம் செல்ல ஆண்டவராகிய இயேசு உம்மை அன்போடு அழைக்கிறார்.
ஆண்டவராகிய இயேசுவின் மரணத்தின் மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய மேன்மையான ஆசீர்வாதங்களைப் பெற்றனுபவிக்க விரும்பினால் பின்வரும் ஜெபத்தைச் சொல்லுங்கள்.

‘கர்த்தராகிய இயேசுவே என் பாவங்களுக்காக நீர் கல்வாரி சிலுவையில் உம் ஜீவனைத் தந்தீர் என்று நான் விசுவாசிக்கிறேன். என் பாவங்களையெல்லாம் தயவாய் மன்னியும். உம் இரத்தத்தினால் என்னைக் கழுவி சுத்திகரியும் உம்மை என் சொந்த இரட்சகராக தெய்வமாக நான் ஏற்றுக்கொள்கிறேன். என்னை ஏற்றுக்கொள்ளும். இனிமேல் நான் உம்முடைய பிள்ளையாக ஜீவிப்பேன். ஆமென்”.

 

You can find equivalent English tract @

The one who gave his life for you