இரட்சிப்பின் ஏழு படிகள்
இரட்சிப்பு என்பது பல அனுபவங்கள் அடங்கிய ஒன்றாகும்.
1. மனந்திரும்புதல் (பாவமன்னிப்பு): ‘கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப். 16:31) மனிதனுடைய கிரியைகள் தேவனுடைய பார்வையில் நித்தமும் பொல்லாதவையாய் இருப்பதால் அவன் தேவனுக்குச் சத்துருவாய் மாறியிருக்கிறான் (கொலோ. 1:21) எனவே அவனுக்குப் பாவமன்னிப்பு அவசியம். அவன் தன் பாவங்களுக்காகக் கர்த்தராகிய இயேசு சிலுவையிலறையப்பட்டார் என்பதை விசுவாசித்து மனஸ்தாபத்துடன் அவற்றை அறிக்கை செய்து மன்னிப்பு கேட்கும்போது அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவன் தேவனுடைய பிள்ளையாகிறான் (1 யோவான் 1:7 9; யோவான் 1:12) அவனுடைய பழைய மனிதன் கர்த்தரோடுகூட சிலுவையிலறையப்படுகிற இவ்வனுபவம் மனந்திரும்புதல் என்றழைக்கப்படுகிறது. அவன் இத்துடன் நின்று விடாமல் அடுத்த அனுபவத்திற்குள் கடந்து செல்ல வேண்டும்.
2. தண்ணீர் ஞானஸ்நானம்: ‘விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்” (மாற்கு 16:16) இரட்சிப்பின் இரண்டாவது படியாகிய ஞானஸ்நானம் வெறும் ஒரு சடங்காச்சாரமல்ல: அதில் ஒருவன் கிறிஸ்துவுடன் கூட மரித்து அடக்கம்பண்ணப்படுகிறான். தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்த சத்தியங்கள் சில: (1) ஞானஸ்நானம் இரட்சிப்பின் ஒரு படி (1 பேதுரு 3:21). (2) ஞானஸ்நானத்தினால் சுத்திகரிக்கப்படுதல் (எபே. 5:26). (3) ஞானஸ்நானத்தினாலே அவருடைய மரணத்திற்குள்ளாக அடக்கம்பண்ணப்படுதல். (ரோமர் 6:4). (1எ) பாவ சரீரம் ஒழிந்துபோகும் பொருட்டாக அவருடைய மரணத்தின் சாயலில் இணைக்கப்படுதல் (ரோமர் 6:5 6). (எ) மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறும்போது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றுக்கொள்ளுதல் (அப். 2:38).
3. தெய்வீக சுகம்: ‘விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்” (யாக். 5:15). தெய்வீக சுகத்தைப் பெற்றனுபவிக்க விரும்பும் ஒருவன் தன் சரீரத்தைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்திருக்க வேண்டும் (ரோமர் 12:1). தேவ கிருபையினாலேயே ஒருவன் தெய்வீக சுகத்தை அனுபவிக்கக் கூடும்.
4. பரிசுத்த ஆவியின் அபிஷேகம்: ‘தமது இரக்கத்தின்படியே மறுஜென்ம முழுக்கினாலும் பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்” (தீத்து 3:5). பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது ஒருவன் தான் மனந்திரும்பும்போது பெற்றுக்கொள்ளும் ஓர் அனுபவமல்ல: அது வேறொரு நிச்சயமான அனுபவமாகும்: இதன் ஒரே வெளிப்படையான அத்தாட்சி பெந்தெகொஸ்தே நாளன்று நடந்தது போல அந்நிய பாஷைகளில் பேசுவதாகும். இதுவே ஒரு முழுமையான விசுவாசியின் வெளிப்படையான அடையாளமாகும். ‘நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்தஆவியைப் பெற்றீர்களா?” (அப். 19:2).
5. கிறிஸ்துவுக்காகப் பாடுபடுதல்: ‘நீங்கள் மருளாதிருக்கிறது …. நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; …. ஏனெனில் கிறிஸ்து … நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது” (பிலி. 1:28 29). ஏதோ தவறிழைத்ததினால் அல்ல கிறிஸ்துவினிமித்தமாகவே நாம் பாடுபடுவோமாகில் அது நம் மகிமையை அதிகரிக்கச் செய்யும்.
6. பரிசுத்தமாகுதல்: ‘நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும் சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும் படிக்கு” தேவன் உங்களை தெரிந்துகொண்டார் (2 தெச. 2:13 14). கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தினாலும் திரு வசனத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நாம் ஆவி ஆத்துமா சரீரத்தில் முற்றிலும் பரிசுத்தமாக்கப்படுகிறோம். (எபி. 13:12; யோவான் 17:17; ரோமர் 15:15; 1 தெச. 5:23).
இந்த படிகள் ஒவ்வொன்றிலும் ஒரு வேறுபிரிதல் நடந்தேறுகிறது. ‘மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள்” (அப். 2:40).
7. சரீர மீட்பு: ‘ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து நமக்குள்ளே தவிக்கிறோம்” (ரோமர் 8:23). இது கர்த்தருடைய இரகசிய வருகையில் சம்பவிப்பதாகும். ‘கடைசிக் காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்பு” (1 பேதுரு 1:5) என்றும் ‘உங்கள் விசுவாசத்தின் பலனாகிய (முடிவாகிய) ஆத்துமரட்சிப்பு” (1 பேதுரு 1:9) என்றும் ‘இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபை” (1 பேதுரு 1:13) என்றும் கூறப்பட்டிருப்பதால் நம் சரீர மீட்பு ‘கடைசி இரட்சிப்பு” என்றும் அழைக்கப்படுகிறது. ‘அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்” (பிலி. 2:12) என்று கூறுமிடத்து அப்.பவுல் இக்கடைசி இரட்சிப்பையே குறிப்பிடுகிறார்.
ஜெபம்:
‘அன்புள்ள ஆண்டவரே இரட்சிப்பின் படிகள் அனைத்தினூடாகவும் நீர் என்னை வழிநடத்தி உம் இரகசிய வருகைக்காக என்னை ஆயத்தப்படுத்தும். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென்”.
You can find equivalent English tract @