Deliverance123

 

என்று விடுதலையோ?

இன்று முழு உலகமும் தனிப்பட்ட நபராயினும் தனித்தனி தேசங்களாயினும் யாருக்கும் அடிமைப்படாதவர்களாக விடுதலையுள்ளவர்களாயிருக்கவே விரும்புகின்றனர். பாரத தேசத்தை ஆங்கிலேயர் கைகளிலிருந்து விடுதலையாக்கி நாட்டிற்குச் சுதந்திரம் பெற்றுத் தர காந்தியடிகள் எத்தனை போராட்டங்கள் உண்ணாவிரதங்கள் சிறைவாசங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டியதாயிருந்தது!

நாட்டிற்கு விடுதலை கிடைத்தபோதும் தனி மனிதன் தன் தனிப்பட்ட வாழ்வில் இன்று அநேக காரியங்களில் விடுதலையற்றவனாய் ‘எனக்கு என்று விடுதலையோ?” என்று ஏங்கித் தவித்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறான். தேவன் ஆதியில் மனிதனைச் சிருஷ்டித்தபோது அவனை விடுதலையுள்ளவனாய் எல்லாவற்றின் மேலும் ஆளுகையுள்ளவனாய் ஒன்றிற்கும் அடிமைப்படாதவனாய் சிருஷ்டித்தார். அவன் சமாதானம் சந்தோஷம் இளைப்பாறுதல் உள்ளவனாயிருந்தான். ஆனால் அவன் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ் செய்தபோது ‘பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்” (யோவான் 8:34) என்ற வேதவசனத்தின்படியே அவன் பாவத்திற்கு அடிமையானான் ஆதிமுதல் பாவஞ்செய்கிற பிசாசு மனிதனைத் தன் சிறையிருப்புக்குள் அடைத்துவிட்டான். அதனிமித்தம் பலவித வியாதிகள் சாபங்கள் மரணபயம் போன்றவற்றிற்கும் மனுஷன் அடிமையானான். இன்றும் இப்படிப்பட்ட பல அடிமைத்தனங்களுக்குள் சிக்குண்டு. விடுதலையின்றித் தவிக்கும் மனுக்குலத்திற்கு விடுதலை என்பதே இல்லையா என்ற கேள்வி எழலாம்.
மனிதன் தன் சுயமுயற்சியால் தன்னைத்தான் பாவத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முடியாது. மேலும் மனிதர் எல்லாரும் பாவஞ்செய்து பாவிகளாயிருப்பதால் இந்த அடிமைத்தனத்திலிருந்து எந்த மனிதனும் மனுக்குலத்தை விடுவிக்க முடியாது. பாவச் சிறையிலிருக்கும் மனிதனை மீட்க பாவமில்லாத ஒருவர் அவனுக்காகப் பலியாக வேண்டியது அவசியமாயிற்று. ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே (லேவி. 17:11). ஆகவே பாவமில்லாத தெய்வமே தம் பாவமில்லாத இரத்தத்தைச் சிந்தி பலியாக மனிதனைப் பாவச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டியதாயிற்று. அதற்காகவே தேவாதி தேவன் மனிதன்மேல் மனதிரங்கி பாவமற்றவராய் இம்மண்ணுலகில் அவதரித்து பாவமில்லாத பரிசுத்தராய் வாழ்ந்து. மனிதனுடைய பாவங்களைத் தம்மேல் ஏற்றுக்கொண்டு அவனுடைய பாவங்களுக்காகச் சிலுவையில் மரித்தார். அவருடைய தூய இரத்தமே மனிதனுடைய விடுதலைக்காக விலைக்கிரயமாகச் சிலுவையில் சிந்தப்பட்டது. இவ்விதம் சிலுவையில் மரித்த அவர் அடக்கம்பண்ணப்பட்ட மூன்றாம் நாளில் மிகப் பெரிய வல்லமைகளாகிய மரணம் பாதாளம் ஆகியவற்றை ஜெயித்து உயிர்த்தெழுந்தார். அவருடைய சிலுவை மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் விசுவாசிக்கிற மனிதனுக்கு என்றென்றைக்குமாய் விடுதலை. நிச்சயமான விடுதலை வாக்குப்பண்ணப்பட்டுள்ளது. அந்த விடுதலையைப் பெற்றனுபவிக்க நீர் செய்ய வேண்டியது யாது?
கர்த்தராகிய இயேசு இவ்வுலகத்திலிருந்த போது ‘குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவான் 8:36) என்று தம்மைக் குறித்துக் கூறினார். எனவே கர்த்தராகிய இயேசுவிடம் நீர் இருக்கிற வண்ணமாக வந்து அவர் உமக்காக மரித்தார் என்பதை விசுவாசித்து உம் கண்களை மூடி நீர் உம் சிறுவயதுமுதல் செய்த பாவங்களை உடைந்த இருதயத்தோடு ஒவ்வொன்றாக அறிக்கை செய்தால் அவர் உம் பாவங்களை மன்னிப்பார். தம் இரத்தத்தினால் உம்மை அவர் பாவங்களறக் கழுவி சுத்திகரித்து தம் பிள்ளையாக மாற்றுவார். இனி உம்மேல் பிசாசுக்கு அதிகாரம் இல்லை. ‘எனக்கு என்று விடுதலையோ?” என்று அங்கலாய்க்கும் உமக்கு இன்று விடுதலை. பாவங்களிலிருந்து தீயப் பழக்கங்களிலிருந்து வியாதிகள் சாபங்களிலிருந்து கடன் தொல்லையிலிருந்து கண்ணீர் கவலைகளிலிருந்து பிசாசின் பில்லிசூனியக் கட்டுகளிலிருந்து மரண பயத்திலிருந்து உமக்கு இன்றே விடுதலை. ‘சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவான் 8:32). கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார். பாவத்திலிருந்து விடுவிக்க அவரே வழி; சொர்க்கத்திற்கு வழிநடத்த அவரே சத்தியம்: நித்திய ஜீவன் அளிக்க அவரே ஜீவன். அவரை ஏற்றுக்கொண்டால் இவ்வுலகில் சமாதானமும் சந்தோஷமும் விடுதலையுமுள்ளவர்களாய் ஜீவித்து. மரணத்திற்குப் பின் ஆண்டவராகிய இயேசுவோடு பரலோகத்தில் பேரின்பம் பெற்று வாழலாம். பாவம் சாபம் வியாதி மற்றும் பலவித அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை பெற நீர் விரும்பினால் உம் இருதயத்திலிருந்து பின்வரும் ஜெபத்தைச் சொல்லுவீராக:

“கர்த்தராகிய இயேசுவே என் பாவங்களையெல்லாம் மன்னித்து என்னை அடிமைப்படுத்தி வைத்திருக்கிற எல்லா அடிமைத்தனத்தின் கட்டுகளிலிருந்தும் என்னை விடுதலையாக்கும் உம்மை என் இரட்சகராகவும் தெய்வமாகவும் ஏற்றுக்கொள்ளுகிறேன். இனி நான் உமக்காகவே ஜீவிப்பேன். ஆமென்”.

 

You can find equivalent English tract @

என்று விடுதலையோ ?